உள்ளூர் உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு நிர்ணயவிலை!

உள்ளூர் உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு நிர்ணயவிலை!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதுடன் இவற்றுக்கு இறக்குமதித் தீர்வையையும் ஏற்படுத்தவுள்ளோம்.

இதனால் விவசாயிகளின் உற்பத்திக்கு நிகரான விலை கிடைக்குமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பழக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் பாலராணி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி விவசாய அமைச்சர் இராமநாதன் அங்கஜன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், மாகாணக் கல்விப்பணிப்பாளர் உதயகுமார், வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் விவசாய அமைச்சர் தேசிய கொடி ஏற்றியதும் விவசாய அமைச்சர், பிரதி விவசாய அமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்,வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் முறையே பழக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

மஹிந்த அமரவீர மேலும்,

“இக்கல்லூரியில் பழமரத்தோட்டம் உருவாக்கியது போல வடமாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் பழ மரத்தோட்டங்கள் உருவாக்கப்படும்.

எமக்கு கிடைக்காத பல பழங்களை புகைப்படங்களாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு பார்த்த பழ வகைகள் உட்பட அனைத்து பழங்களையும் கொண்டதாக இப் பழத்தோட்டத்தை உருவாக்குவோம்.

எமது நாட்டுக்கு 60 ஆயிரம் மெற்றிக்தொன் பழங்கள் வருடந்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2000 மெற்றிக்தொன் திராட்சைப்பழங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

958 மில்லியன் ரூபா பெறுமதியான தோடம்பழங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவற்றையெல்லாம் எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். யாழ்ப்பாணத்திலும் பழச்செய்கையை நன்றாக மேற்கொள்ள முடியும். இங்கும் திராட்சை உற்பத்தி செய்யப்படுகின்றது.

விவசாய உற்பத்திக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்பதற்காக பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்கின்றனர்.

விவசாய உற்பத்திகளுக்கு நல்ல விலை கிடைக்க ஜனாதிபதியின் வழிகாட்டலில் சரியான தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. ஏற்றுமதிக்குரிய விலை கிடைக்கக்கூடியதாக நாம் வேலை செய்து வருகின்றோம்.

விவசாயிகளின் நலன் கருதி இப்போது நெல்லுக்கு நிர்ணயவிலையை ஏற்படுத்தினோம். அடுத்த வாரம் சோளத்துக்கு நிர்ணயவிலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

உருளைக்கிழங்கு, சின்னவெங்காயம் பெரிய வெங்காயத்திற்கும் உத்தரவாத விலையை ஏற்படுத்தி இவற்றின் இறக்குமதிக்கு தீர்வை ஏற்படுத்திக்கட்டுப்படுத்தவுள்ளோம்.

நிலக்கடலைக்கும் உத்தரவாத விலையை ஏற்படுத்தவுள்ளோம். எனவே ஜனாதிபதியின் செயற்றிட்டத்துடன் இணைந்த எமது தேசத்தை விவசாயத்தில் வளப்படுத்த வேண்டும்.

வடக்கின் விவசாய அபிவிருத்திக்கென அடுத்த வருடம் 3000 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிட பிரதி விவசாய அமைச்சின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்நிதி மூலம் பல விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும். உங்களுக்கு தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்ய வேண்டும். நாமே பயிரிட்டு உண்ண வேண்டும். இது விவசாயிகளான உங்கள் கைகளில் தான் உண்டு” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net