ரணிலுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை உயர்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய பொலிஸார் இந்த அடாவடியான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
லண்டன் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று மாலை ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார்.
இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னாள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்திய படி தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு பயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என வேண்டுமென்ற தவறான தகவலை வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானிய பொலிஸாரும் அடாவடியாக ஆர்ப்பாட்டத்தில் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 20.00 மணிக்கு லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்றினார்.
இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக யூனியனுக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை ஒக்போர்ட் யூனியனுக்கு ரணிலின் நிகழ்வை நிறுத்துமாறு கோரி ஏராளமான மின்னஞ்சல்களை மக்கள் அனுப்பியிருந்தனர்.
நேற்றுமுன்தினம் லண்டன் வருகை தந்திருந்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரேவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்த நிலையிலேயே என்று பிரமதமருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து காப்பாற்றிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நாட்டின் பிரதமர் என்றவகையில் அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார். தவிர, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்தவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார்.
எனினும் சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்ல மறுத்துவருவதுடன் இலங்கை படையினரை யுத்தக்குற்றச்சாட்டிலிருந்து பாதுகாத்து வருகிறார்.
இந்நிலையிலேயே ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதே போல் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக வந்திருந்த போது புலம்பெயர் தமிழர்களின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையையடுத்து அவரது நிகழ்வு இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.