14 வயது சிறுவனைக் காப்பாற்ற நினைத்த 4 வயது சிறுவனும் பலி!

குழியில் விழுந்த 14 வயது சிறுவனைக் காப்பாற்ற நினைத்த 4 வயது சிறுவனும் பலி!

ஒடும் நீரில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் நவகத்த, யட்டியனதுர -வாரியப்போல பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஸ்பொத மகா வித்தியாலயத்தில் 9ம் வகுப்பில் படிக்கும் லசிது நவீன் வித்தராண (14 வயது) மற்றும் மாஎலிய-பொல்பித்திகம பகுதியில் வசிக்கும் எம்.டி. கவிஷான் லக்‌ஷான் புஸ்பகுமார என்ற 4 வயது சிறுவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள்.

உயிரிழந்தவர்கள் இருவரும் சித்தப்பா மற்றும் மகன் முறையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் மரண பரிசோதனை குருநாகல் நகர மரண பரசோதகர் தர்மகீர்த்தி அமரசிங்க அவர்களால் நடாத்தப்பட்டது.

உயிரிழந்த 4 வயது சிறுவனின் தந்தையும், 14 வயது சிறுவனின் உறவினருமான லஹிரு சாந்த இந்த சம்பவம் தொடர்பாக இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார்.

”உயிரிழந்த கவிஷான் எனது மகன். உயிரிழந்த லசிது நவீன் எனது சித்தியின் மகன். அவர் என் சகோதரர்.

பொத்துஹெர, கட்டுப்பிட்டிய பிதேசத்தில் உள்ள 20 ஏக்கர் தோட்டத்தை பாதுகாப்பதற்காக கடந்த 5ம் திகதி காலையில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சென்றேன்.

என்னுடன் உயிரிழந்த சகோதரரும் எங்களுடன் தோட்டத்திற்கு வந்தார்.

நாங்கள் தோட்டத்திற்கு வந்து சிறிது நேரத்தில் மழை பெய்தது. பகல் 3 மணியளவில் மழை விட்டபோது நான் தேங்காய் எடுப்பதற்கு தோட்டத்திற்குச் சென்றேன்.

என் மகனும் சகோதரரும் என்னைப் பின் தொடர்ந்தனர். தோட்டத்திற்கு உட்செல்லும் வீதிக்கருகில் ஓடும் தண்ணீரில் இருவரும் விளையாடினர்.

அப்போது அதற்கு அருகில் இருந்த குழியில் உறவினர் வீழ்ந்ததை நான் கண்டேன். அவர்கள் இருந்த இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நான் இருந்தேன்.

நீரில் மூழ்கிய சகோதரனை மீட்பதற்கு கையை நீட்டிய எனது மகனும் குழியில் விழுந்ததை கண்டேன். அவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் என்னால் மீட்க முடியவில்லை.

அயலவர்களுடன் 20 நிமிடங்கள் தேடிய பிறகே அவர்கள் கிடைத்தார்கள். இதனையடுத்து இருவரும் தலம்பட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் இரு பிள்ளைகளும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

Copyright © 5809 Mukadu · All rights reserved · designed by Speed IT net