வடகொரிய தலைவருடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ட்ரம்ப் உறுதி!
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-உடனான இரண்டாவது சந்திப்பு விரைவில் இடம்பெறுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இரு நாடுகளின் அதிகாரிகளும் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலியின் பதவி விலகல் தொடர்பாக வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப்பிடம், வடகொரிய தலைவருடனான சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெறும் என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
“கடந்த வாரம் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, வடகொரிய தலைவரை சந்தித்திருந்தார். மூன்று அல்லது நான்கு இடங்களை சந்திப்புக்காக நாங்கள் உத்தேசித்துள்ளோம். நேரத்தையும், தூரத்தையும் கணிப்பிட்டு அதற்கான முடிவு எட்டப்படும்.
சிங்கப்பூர் அற்புதமான இடம்தான். ஆனாலும், நாங்கள் வேறு இடங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருகிறோம்” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் – கிம் இடையிலான முதல் உச்சிமாநாடு கடந்த ஜூன் மாதம் இடம்பெற்றது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.
எனினும் வடகொரியா அணுவாயுத ஆராய்ச்சிகளை தொடர்வதாகவும் அணுவாயுதமற்ற பிராந்தியமாக்குவதற்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கிம் – டிரம்ப்பின் அடுத்த சந்திப்பு குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது