கென்யாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 51 பேர் பலி!
கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து கிசுமு பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 51 பேர் வரை உயிரிழந்ததாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) காலை அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குடைசாய்ந்ததிலேயே அதிக பயணிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிக்கியிருப்பார்களாயின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
மிக அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது, பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த பாரிய அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கென்ய பொலிஸ் தலைமை அதிகாரி ஜோசெஃப் பொய்னெட் தெரிவித்தார்.
விபத்தின்போது பேருந்தின் மேற்பகுதி முற்றாக உடைந்து வேறாகியுள்ளது. பேருந்து அனர்த்தத்தை எதிர்கொண்ட தருணத்தில் அதில் 52 பேர் வரை பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.