துர்க்கைக்கு இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்!
‘துர்க்கை’ என்றாலே வீரமும் கோபமும் விவேகமும் நிறைந்த பெயர் என பலரும் கருதுவார்கள்.
அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு துர்க்கா எனப் பெயர் வைப்பவர்களும் உண்டு, குறித்த பெயரை வைத்தால் பிள்ளை கோவக்காறியாக வளர்ந்துவிடுவாலோ என அஞ்சுபவர்களும் உண்டு.
ஆனால் துர்க்கா தேவியின் கோபம் ஆவேசமாதோ, அடங்காததோ இல்லை. அவளின் கோபங்கள் தீயதை அழிக்க மட்டுமே என்பத ஆன்மீகவாதிகள் கூறும் உண்மை.
துர்க்கை மிக தூய்மையை நேசிப்பவள், மனதில் வைராக்கியமும் வாழ்வில் வெற்றியும் காணவேண்டுமாயின் அதன் சக்தியை வேண்டி துர்க்கையை வழிபட வேண்டும் என்பார்கள்.
இத்தகைய சக்தி வாய்ந்த துர்க்கைக்கு இன்று நவராத்திரியின் இரண்டாம் நாளாகும். நவராத்திரி என்பது இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதமாகும்.
வீரத்தை வேண்டி துர்க்கையையும், செல்வத்தை வேண்டி லக்ஷ்மியையும், கல்வியை வேண்டி சரஸ்வதியையும் தொழுது ஒன்பது நாட்கள் இந்த விரதம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இறுதியாக பத்தாம் நாள் விஜயதசமி இடம்பெறுகிறது. இந்நாளில் சிறு பிள்ளைகளுக்கு ஏடு தொடக்குதல், காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
அந்த வகையில் இன்று இரண்டாவது நாளாக துர்க்கைக்கான பூஜை ஆலயங்களிலும் வீடுகளிலும் பாடசாலை மற்றும் நிறுவனங்களிலும் அனுஸ்டிக்கப்படுகிறது.
துர்க்கை அவதாரம்:
முன்னொரு காலத்தில் பார்வதி தேவி, ஞானம் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவம் இயற்றத் தொடங்கினாள். காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, உதவிகள் புரிவதற்காக இங்கு வந்து உதித்தாள்.
களிமண்ணில் அழகான சிவலிங்கத்தை உருவாக்கினாள் பட்டி. பின்னர் தனது கொம்புகளினால் மண்ணைத் தோண்டி குளம் அமைத்தாள்.
ஈசனுக்கு பார்வதி அபிஷேகம் செய்ய ஏதுவாக புனித நதிகளான கங்கையையும், காவிரியையும் தனது ஆத்ம பலத்தால் இக்குளத்துக்கு வரவழைத்தாள்.
தானே பால் சுரந்து பாலாபிஷேகத்துக்கும் வழி வகுத்தாள் பட்டி. இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்ற பெயர் ஏற்று இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான்.
அதுமுதல் பட்டீஸ்வரம் என்றே இவ்வூருக்குப் பெயர். இவ்வூரில்தான் துர்க்கை அருள்பாலித்தாள் என்பது புராணம்.
வீர நாயகி:
பொதுவாகவே துர்க்கை தீமைகளையும் பாவங்களையும் அழித்து வெற்றியை அளிப்பவள்.
ரேணுகா தேவியின் புதல்வரான, சத்திரிய குலத்தை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டு, பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்ட பரசுராமர் துர்க்கையை வணங்கி தேவர் உலகம் சென்றார் என்கிறது புராணம்.
ராவணனை வதம் செய்த ராமரும், கர்ணனை வதம் செய்த அர்ச்சுனனும் கொன்ற பாவம் தீர துர்க்கை பூஜை செய்தனர். துர்க்கை, பெண்பால் தெய்வம் என்றாலும், மரண பயம் நீக்குபவள்.
பாவத்தை அழிப்பதில் சிவ அம்சத்தையும், வெற்றியை அளித்து வாழ வைப்பதில் விஷ்ணு அம்சத்தையும், பக்தர்களின் தேவைகளைப் புதிதாகப் படைப்பதில் பிரம்ம அம்சத்தையும் கொண்டவள்.
இதனால் மந்திர ஜபமாக துர்க்கையைப் பூஜித்தால் முப்பத்து முக்கோடி தேவர்களை ஆராதித்த பலன் கிடைக்கும்.