இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசர் யார்?
இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரை தெரிவுசெய்வதற்காக, அரசிலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தை சபையில் அறிவித்தார்.
பிரதம நீதியரசர் பதவிக்கு தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார்.
எனினும், அரசியலமைப்புச் சபை செயலிழந்து காணப்பட்டதால் அச்செயற்பாடு முடங்கிப்போனது.
19ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட அரச உயர் பதவிகளுக்கு, அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் அவசியம்.
எனினும், 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபைக்கு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இன்று சிவில் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் மூவர் பெயரிடப்பட்டனர். இந்நிலையில், குறித்த 10 பேர் அடங்கிய அரசியலமைப்புச் சபை நாளைய தினம் கூடி இலங்கையில் 46ஆவது பிரதம நீதியரசரை பெயரிடவுள்ளது.
இதேவேளை தற்போது பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் பிரியசாத் டெப் நாளை ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.