துமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
துமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டு மனுவையும் நிராகரித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தினால் இன்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது.
துமிந்த சில்வா உள்ளிட்ட சாட்சியாளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.