நாடாளுமன்ற எல்லைக்குள் கூட்டமைப்பு போராட்டம் நடத்த வேண்டும்!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு, நாடாளுமன்ற எல்லைக்குள்ளேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம் நடத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மாறாக வெளி வீதிகளிலும், பொது அமைப்புகளின் போராட்டங்களிலும் கலந்துகொள்வதால் எவ்வித தீர்வும் கிடைக்கப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈஸ்வரிபுரம் இளந்தளிர் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது முன்பள்ளிக்கான மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரபா கணேசன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான போராட்டங்களில் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளக் கூடாதென குறிப்பிட்டார்.
அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.