பாதிரியாரை விடுவிப்பதே துருக்கிக்கு உகந்தது!
துருக்கியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது நாட்டு பாதிரியாரை அடுத்த வழக்கு விசாரணையின் போது விடுவிப்பதே அந்நாட்டிற்குச் சிறந்ததென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அங்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான ரீதியில் துருக்கி இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், அதன்மூலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் பாதிரியாரும் அவரது மனைவியும் நாட்டிற்கு திரும்புவர்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவுகள் தொடர்பாக, இது முக்கிய அம்சமாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக துருக்கியில் பணியாற்றிவந்த அண்ரூ பிரண்சன் என்ற பாதிரியார், கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்.
இதனால் துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் விரிசல் எற்பட்டது. நேட்டோ நாடுகளுக்கிடைலான பதற்றத்தை ஏற்படுத்தவும் இது வழிவகுத்திருந்தது.
ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டில் பிரகடனப்படுத்தியிருந்த அவசரகால நிலை, தையீப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அண்மையில் நீக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாதிரியாரையும் துருக்கி விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்பின்னர் அவரின் சிறைத்தண்டனை முடிவுறுத்தப்பட்டு வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டது. எனினும், அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.
எனினும், பாதிரியார் விடயத்தில் நீதிமன்றம் உரிய தீர்மானங்களை முன்னெடுக்கும் என்றும், அதில் தலையிட முடியாதென்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.