விடுதலைப் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை!

விடுதலைப் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை!

”30 வருடகால யுத்தத்தின்போது இராணுவமும் விடுதலைப் புலிகளும் மட்டும் தவறிழைக்கவில்லை. மாறாக பொதுமக்களாலும் நாட்டில் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தவறுகளை நீதிமன்றின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இதனால்தான் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

”விடுதலைப் புலிகளினால் வடக்கு- கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள், மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன என்பதையும் கூறிக்கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்து இன மக்களுக்கும் நல்லிணக்கம், சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இராணுவமும் விடுதலைப் புலிகளும் மட்டும் தவறிழைக்கவில்லை.

மாறாக பொதுமக்களாலும் நாட்டில் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தவறுகளை நீதிமன்றின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த முடியாது.

இதனால்தான் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இது ஏனைய நாடுகளிலும் பின்பற்றப்பட்டுவந்த ஒரு நடைமுறைமையாகும்.

எனினும், இந்த நடைமுறையை மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.

இந்தத் தரப்பினர் இவ்விடயத்தை நீதிமன்றின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால், நீதிமன்றத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வினைப் பெற்றுவிட முடியாது.

சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களால் அநீதிகள், தொந்தரவுகள் இழைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வடக்கு- கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களால் அநீதிகள் இடம்பெற்றுள்ளன. இதுவே உண்மையாகும்.

இவ்வாறு இப்போது போட்டி போட்டுக்கொண்டு இனவாதத்தை பரப்பிவருகிறார்கள்.

கிளிநொச்சியில் சிறுத்தையைக் கொலைசெய்த விடயத்தைக்கூட இனவாதமாகத்தான் கருதினார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இனவாதம் தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் இருக்கிறது. வடக்கு என்பது தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் உரித்தான ஒன்றாகும்.

இதனை எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனும் ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே, இந்த தகவலை சம்பந்தன் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இனவாதப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net