அனித்தா இல்லாத வட மாகாணத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

அனித்தா இல்லாத வட மாகாணத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

9 மாகாணங்களையும் செர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் 38 (ஆண்கள் 19, பெண்கள் 19) வகையான தட, கள நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கங்களுக்கு குறிவைத்து போட்டியிடவுள்ளனர்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.55 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த அனித்தா ஜெகதீஸ்வரன் இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றமாட்டார்.

இது வட மாகாணத்துக்கு பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் இவர் ஒருவரே கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்துக்கான தங்கப் பதக்கத்தை கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையுடன் வென்றுகொடுத்திருந்தார்.

கொழும்பு சுகததாச விளயைாட்டரங்கில் நடைபெற்ற 56ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.55 மீற்றர் உயரம் தாவி மாத்தறையில் கடந்த வருடம் நிலைநாட்டப்பட்ட தனது சொந்த சாதனையான 3.48 மீற்றர் உயரத்தை முறியடித்திருந்தார்.

கனிஷ்ட தேசிய மெயல்லுநர் போட்டிகளின் பின்னர் உபாதைக்குள்ளான அனித்தா, ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் பங்குபற்றியபோதிலும் 3.40 மீற்றர் உயரத்துக்கு அப்பால் அவரால் தாவ முடியாமல் போனது.

உபாதையிலிருந்து மீளாத காரணத்தால் இம்முறை போட்டிகளில் தன்னால் பங்குபற்ற முடியாமிலிருப்பது பெருங் கவலையைத் தருவதாக ‘மெட்ரோ ஸ்போர்ட்ஸ்’ பகுதிக்கு அனித்தா தெரிவித்தார்.

இதன் காரணமாக இம்முறை வட மாகாணத்துக்கு மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எவ்வாறாயினும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஏ. புவிதரன் (சாவகச்சேரி இந்து), நெப்தலி ஜொய்சன் (அளவெட்டி அருணோதயா), எஸ். டிலக்சன் (தெல்லிப்பழை மகாஜனா) ஆகியொரும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சி. ஹெரினா (மகாஜனா), எஸ். திவ்வியா (பளை மத்திய கல்லூரி) ஆகியோரும் வட மாகாணத்துக்கு பதக்கம் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அதி சிறந்த குறுந்தூர ஓட்ட வீரர்களான எம். அஷ்ரவ், எம். ஆஷிக், பாஸில் ஒடயார் ஆகியோர் பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

அத்துடன் இளம் வீரர் அருண தர்ஷன, அனுபசாலி காலிங்க குமாரகே ஆகியோரும் கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பதால் 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net