இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை!
இந்நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உரிமை இல்லையெனவும், அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”டிலான்பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கும், இடைக்கால அரசாங்கம் பற்றி கதைப்பதற்கும் எந்த மக்கள் ஆணையும் வழங்கப்படவில்லை.
மக்களினால் நிராக்கரிப்பட்டவர்களே இன்று இவ்வாறு இடைக்கால அரசாங்கம் தொடர்பாக பேசிவருகின்றனர்.
கடந்த காலத்தில் இந்நாட்டில் இனங்களுக்கு இடையிலான பதற்றம் காணப்பட்ட போதிலும் அந்நிலை இன்று மாறியுள்ளதுடன், தற்போது நாட்டில் இனப்பிரச்சினை மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக தெரிவித்த அவர்,
”கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கான தீர்வு தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை ஆராய்ந்து அதன் ஊடாக ஒரு முடிவுக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை முற்றாக நிராகரித்துவிட்டது.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த தீர்வினை நானும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதனை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து பேசியிருந்தால் இந்நேரம் அரசியல் கைதிகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார்.