மகிந்த இதை செய்வதை விட கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு அரசாங்கம் ஒன்றில் இணைவதை விட கழுத்தில் சுருக்கிட்டு கொள்வது மிகவும் சிறந்தது என துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வலுவிழந்து வரும் அரசாங்கத்தை மீண்டும் பாதுகாக்க கூட்டு அரசாங்கம் ஒன்றும் அவசியமில்லை. மகிந்த ராஜபக்ச கூட்டு அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்பதனால் பிரச்சினையை தீர்க்க முடியாது. இதனால், டொலரின் பெறுமதியும் குறையப் போவதில்லை.
தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியை முன்னெடுப்பதாகவும் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் அவர்களே கூறிக்கொள்கின்றனர்.
அரசாங்கத்தின் பணிகள் எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும்.
நல்லாட்சி என்ற பெயரில் தாம் மேற்கொண்டு வருவது பொய் என்பதை அறிந்துள்ளதால், அரசாங்கம் தேர்தலை நடத்தாது.
அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை முன்வைத்தாலும் மக்களின் நிலைப்பாட்டை அறிய அரசாங்கம் பயப்படுகிறது.
தற்போதைய தேவை இடைக்கால அரசாங்கம் அல்ல. இவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் அணியின் யோசனைகளோ தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டியதே அவசியமானது.
அதற்காகவே போராட வேண்டும். இதனை தவிர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கம் என்ற யோசனையில் கூட்டு எதிர்க்கட்சி சிக்கிக்கொள்ளக் கூடாது.
அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் குறுகிய காலத்தில் முடிந்து விடும். இப்படியான சூழ்நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் அல்ல.
அமைச்சர் பதவி, அலுவலகம், வாகனம் போன்ற தேவை இருப்பவர்களே இப்படியான யோசனைகளை முன்வைப்பார்கள் எனவும் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.