சட்டமா அதிபரால் கைவிடப்பட்டார் முதலமைச்சர்!
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று சட்டமா அதிபர் நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பதுளை தமிழ் பெண்கள் மகாவித்தியாலய அதிபர் பவானி ரகுநாத்தை தனது செயலகத்துக்கு அழைத்து, மிரட்டி, முழங்காலில் மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்தார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் அதிபர் பவானி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதன்போதே, இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சர் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டவாளர்கள் முன்னிலையாக மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் 25 ஆம் நாள் இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.