இன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார்!
இன ஐக்கிய மேம்பாட்டிற்காக சம்பந்தனுடன் இணைத்து பயணிக்க தயார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 157 வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“பெருந்தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க நாட்டில் இன ஐக்கியத்தை மேம்படுத்த அமைச்சர் திகாம்பரம் மற்றும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோரை இணைத்து கொண்டு பயணிக்கவுள்ளோம்.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என நானும் கூட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தேன். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
இது அரசியல் இலாபம் கருதி செய்யப்படும் ஒரு வேலை அல்ல. இன்று லயன் குடியிருப்புகளில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு உறுதுணையாக இருப்போம்.
எதிர்காலத்தில் மலையக வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயல்பாடுகள் அமையும் என்பதில் ஐயம் இல்லை.
இந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளுக்கு அப்பால் கிடைக்கப்பெற்றிருக்கும் 10,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் கூட 1134 வீடுகள் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சுகாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் அரசமயமாக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.