பொலிஸ்மா அதிபர் நாளை இராஜினாமா?
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது கொலை சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்தே அவர் பதவியை இராஜினாமா செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியின் பாதுகாப்பு துறையின் தலைவராகவுள்ள எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதித்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி அவரை பதவி விலக்குவதற்கு முன்னர் தாமாகவே பதவியை இராஜினாமா செய்ய பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸாரின் நடவடிக்கைகள் கோமாளித் தனமாக காணப்படுவதாகவும் பொலிஸ்மா அதிபரின் நடவடிக்கை தம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எதிர்வரும் வாரங்களில் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படலாமென கூறப்பட்டு வந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர தாமாகவே பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.