மண்சரிவினால் நீர்த்தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்ற குடியிருப்புக்கள்!
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் எற்பட்ட மண்சரிவினால் நான்கு குடியிருப்புக்கள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு போயுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழிறங்கிய சம்பவம் தொடர்பில் நான்கு குடியிருப்புகள் காசல் ரீ நீர் தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15.10.2018) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த ஒருவாரத்திற்கு முன்பு குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலம் தாழ் இறக்கம் மற்றும் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் தொடர்பில் அங்கிருந்து ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் வெளியேற்றபட்டனர்.
அதனை தொடர்ந்து பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதி தாழிறங்கியமை தொடர்பில் ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதி முழுமையாக முடப்பட்டது.
நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த ஹட்டன் – பொகவந்தலாவை வீதி மற்றும் குறித்த பகுதியில் இடம் பெயர்ந்து சென்ற மக்களின் நான்கு குடியிருப்புகளும் காசல் ரீ நீர்தேக்கத்திற்குள் அள்ளுண்டு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனால் ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி தொடர்ந்தும் முழுமையாக முடப்பட்டுள்ளதோடு பொதுமக்கள், பாடசாலை, மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
எனவே குறித்த வீதி புனர்நிர்மாண நடவடிக்கை மேற்கொள்ளும் வரை ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி மூடப்படுமென மஸ்கெலியா, பொகவந்தலாவை, சாமிமலை போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் நோர்வூட் நகரில் இருந்து செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.