சவுதி ஊடகவியலாளர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி அறிவிப்பு!
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லிலுள்ள தூதரகத்தினுள்ளேயே கொலைசெய்யப்பட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.
அதற்கான தடயங்கள் காணப்படுவதாகவும் துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரகத்தில் நேற்று (திங்கட்கிழமை) துருக்கி மற்றும் சவுதி அதிகாரிகள் இணைந்து தேடுதல் நடத்தினர்.
தேடுதலின் பிரகாரம், ஜமால் கஷோக்கியை தூதரகத்திற்குள்ளேயே சவுதி முகவர்கள் கொலைசெய்து அவரது சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர் என துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கஷோக்கியை கொலைசெய்தவர்கள் முரட்டுத்தனமான கொலையாளிகள் என கடுமையாக சாடியுள்ளார். குறித்த கொலைக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்றும் கூறியுள்ளார். சவுதியை தண்டிக்க நேரிடுமென ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கஷோக்கியின் கொலை தவறாக நடந்துவிட்டதென குறிப்பிடுவதற்கு சவுதி அரேபியா தயாராகி வருகின்றதென சீ.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு சவுதி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்ற ஜமால் கஷோக்கி அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இவ்விடயம் தொடர்பாக உலக நாடுகள் சவுதி மீது கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்த நிலையில், அவர் கொலைசெய்யப்பட்டதாக துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.