கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மகிந்த!

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மகிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் திட்டத்திற்கு அமையவே கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க செய்துள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்க நேற்று சென்றிருந்தார்.

அப்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர்,

மகிந்த ராஜபக்ச, ஆட்சி அதிகாரம் தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவுக்கு செல்வதையே விரும்புகிறார். இதனால், கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்க அவர் விரும்ப மாட்டார்.

அப்படி அதிகாரம் கோத்தபாயவுக்கு சென்றால், அடுத்து அவரது மகனுக்கு செல்லும். சமல் ராஜபக்சவுக்கு வழங்கினால். அடுத்து அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவுக்கு செல்லும்.

அப்படி நடந்தால், நாமல் ராஜபக்சவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது. இதனால், மகிந்த ராஜபக்ச தான் கொண்டுள்ள நிலைப்பாட்டை வாசுதேவ நாணயக்கார, குமார வெல்கம ஆகியோர் ஊடாக வெளிப்படுத்தி வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் மகிந்த ராஜபக்ச, இவர்கள் இருவரும் நடிக்கின்றனர் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சொந்தமான பங்களா ஒன்று கதிர்காமம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருப்பதாக பிரதியமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net