ஜனாதிபதி – இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு !
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுடன் இரகசிய சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் அவரை இவ்வாறு சந்தித்துள்ளதாகவும், இருவருக்கும் இடையே சுமார் இரண்டரை மணி நேரம் வரை கலந்துரையாடல் நீண்டதாகவும் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எவையும் வெளிபபடுத்தப்படாத போதும், தற்போதைய பொலிஸ் சேவை குறித்தும் பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் பொலிஸார் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என கருதப்படும் நிலையில் அவருக்கு அடுத்த பாதுகாப்பு செயலாளர் பதவி அல்லது புதிய பொலிஸ் ஆணைக் குழுவின் தலைமைப் பதவியை வழங்குவது குறித்து ஜனாதிபதிக்கு விஷேட அவதானம் உள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மிக விரைவில் புதிய பாதுகாப்பு செயலர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அப்பதவிக்கான பெயர் பட்டியலில் இதுவரை ஜனாதிபதி செயலணியின் பிரதானி ஹேமசிறி பெர்னாண்டோவின் பெயரே இருந்து வந்தது.
இந்நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் உயர் மட்டத்தில், அடுத்த பாதுகாப்பு செயலர் பதவி இலங்ககோனுக்கு வழங்கப்படலாம் என்ற ரீதியிலும் தகவல்கள் கசிந்துள்ளன.
எனினும் புதிதாக நியமிக்கப்படவுள்ள பொலிஸ் ஆணைக் குழுவின் தலைவராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனின் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என நம்பகரமாக அறிய முடிகின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் கடமையாற்றுகின்றனர். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் 41 – ஈ சரத்தின் பிரகாரம் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதுள்ள உறுப்பினர்கள் தமது பதவிகளில் தொடர அனுமதியுள்ளது.
இந் நிலையிலேயே புதிய பொலிஸ் ஆணைக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு பதவி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்ப்டுகின்றது.
என்.கே. இலங்ககோன் இலங்கை பொலிஸ் சேவையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி முதல் 2016 ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை 33 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவராவார். அவரின் ஓய்வை அடுத்தே தற்போதைய பொலிஸ் மா அதிபர் நியமனம் பெற்றிருந்தார்.