தமிழ் சமூகத்தில் சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெறுகிறது அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ்!
எமது தமிழ்ச் சமூகத்தில் தற்போது சத்தமில்லாத யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது.இது எங்களை மிகப்பெரும் பாதிப்புக்கு கொண்டு சென்றுவிடும் என கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் இயக்குநர் அருட்தந்தை அந்தோனிமுத்து குரூஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இன்று புதன் கிழமை அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் வாணி விழா நிகழ்வில் ஆசியுரை வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
எங்களுடைய சமூகம் குறிப்பாக இளம் சமூகம் போதைப் பொருளுக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றார்கள், பல குடும்பங்களில் எழுதப்படாத விவாகரத்துகள் எழுதப்பட்டுகொண்டிருக்கின்றன.
பிள்ளைகள் தற்கொலைக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், சமூகம் ஆன்மீகத்தில் இருந்து விடுப்பட்டு சென்றுக்கொண்டிருக்கிறது.
திருநீறு பூசிய முகங்களை காண்பது அரிதாக இருக்கிறது. நவீன உலகில் பெற்றோர்கள் சதா பிசியாக இருக்கின்றார்கள் இதனால் பிள்ளைகளை முறையாக கவனிக்க முடியாது போகிறது எனத் தெரிவித்த அருட்தந்தை அவர்கள்
இந்த நிலைமைகள் கவலையளிக்கிறது இதுவொரு ஆபத்தான நிலைமை சத்தமில்லாமல் தமிழ் சமூகத்தை அழிக்கின்ற யுத்தம் இவ்வாறே இடம்பெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.