மிகஆபத்தான இணையத்தாக்குதல் அபாயத்தில் இங்கிலாந்து!

மிகஆபத்தான இணையத்தாக்குதல் அபாயத்தில் இங்கிலாந்து!

மிகவும் ஆபத்தான இணையத்தாக்குதல் ஒன்றுக்கு இங்கிலாந்து முகம்கொடுக்கக் கூடுமென தேசிய இணையப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஸியாறன் மார்ட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முழுமையாக செயற்பட ஆரம்பித்த இம்மையத்தின் முன்னணி அணிகள் இதுவரை 1167 இணைய தாக்குதல்களைக் கையாண்டுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான விரோதப்போக்கைக் கொண்டுள்ள நாடுகளிலிருந்தும் ஹக்கர்களால் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் ஏறக்குறைய 10 இணைய தாக்குதல்களிலிருந்து ஒரு சிறப்பு பிரிவு தடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹக்கர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் அந்தநாடுகளின் அரசாங்கங்களால் மறைக்கப்படுகின்றன எனவும் அந்நாடுகளே சில தாக்குதல்களுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஹக்கர் குழுக்கள் எமது தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான மற்றும் நேரடி இணைய அச்சுறுத்தலாக அமைகின்றன எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய இணையப்பாதுகாப்பு மையம் மிகமோசமான ஒரு தாக்குதலை எதிர்கொள்ளவேண்டி வருமெனவும் இத்தாக்குதலின் காரணமாக கடுமையான பொருளாதார அல்லது சமூக விளைவுகள் ஏற்படக்கூடுமெனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இன்று தேசிய இணையப்பாதுகாப்பு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை இங்கிலாந்து எதிர்கொள்ளும் இணையத்தாக்குதல் அபாயத்தின் அளவை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net