அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்!

அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்!

*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு
* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு

ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பீரிஸ்

காணாமலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போமென காணாமலாக்கப்பட்டோருக்கான ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து பின் காணாமல்போனோர் பற்றிய பெயர் பட்டியலை படைத்தரப்பிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு காணாமல் போனோர் அலுவலகம் பல்வேறு முறைகளை கையாண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு நேற்று கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வுக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து காணாமல்போனோரின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்து கொண்டதுடன் காணாமல்போன தமது உறவை தேடித் தருமாறும் கதறி அழுதனர்.

“காணாமல்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சந்தேக நபர்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தமது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென கா மலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. எனினும் அப்பரிந்துரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. அதற்காக இதனை நாம் கைவிட மாட்டோம்.

இவ் விடயத்தில் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம். அரசாங்கத்தின் ஆணைக்குழு என்ற வகையில் எமது கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உண்டு,” என்றும் தலைவர் சாலிய பீரிஸ் கூறினார்.

“அத்துடன் யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்த பலர் காணாமல்போயிருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.எனினும் அவர்களுடைய பெயர்ப் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை படைத்தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ள எமது அலுவலகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

நாம் கேட்டவுடன் எவரும் தகவல்களை எமக்கு வழங்கப் போவதில்லை. அதற்காக பல உபாய மார்க்கங்களை கையாள வேண்டிய சூழ்நிலை எமக கு ஏற்பட்டுள்ளது. அதனை நாம் படிப்படியாக முன்னெடுத்து வருகின்றோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இந்த அமர்வில் கலந்து கொண்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சேவையிலிருந்து இடை நிறுத்தப்படுவதில்லையென விசனம் தெரிவித்ததுடன் பாதுகாப்பு தரப்பிலிருந்து எவ்வாறு தகவல்களைப் பெற்றுக் கொள்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் விதத்திலேயே தலைவர் சாளிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

நட்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதும் காணாமல்போனவர்களுக்குரிய நட்டஈட்டுத் தொகை விரைவில் தீர்மானிக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமலாக்கப்பட்டோரின் அநேகமான உறவுகளுக்கு இன்னும் இந்த அலுவலகம் மீது முழுமையான நம்பிக்கையில்லை.

அவர்களிடத்தே நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது முக்கிய குறிக்கோளென சுட்டிக்காட்டிய தலைவர் சாலிய பீரிஸ், அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் எமக்கு யோசனைகளை முன்வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net