அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை!

அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை!

நாட்டில் அரசியல் செய்ய முடியாது எனவும், அரசியலை விட்டு விலகுமாறு தனது தாயார் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலிட்டுச் சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த செய்தியாளர் சந்திப்பில் அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை. எமது நாட்டுக்கு ரயில், பஸ் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அவற்றுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடியாது. இவ்வாறு அனுமதி கிடைக்காவிட்டால் உடனடியாக ஊடகங்களை அழைத்து சந்திப்பு நடத்துகின்றனர்.

ஊடகங்களும் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது செய்தி வெளியிடுகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த ரயில் திட்டம் தொடர்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டது. ஐந்து பில்லியன் யூரோ பெறுமதியான இந்த முதலீட்டுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

எவ்வளவு பெரிய திட்டம் என்றாலும் உரிய ஆவணங்கள் இன்றி அனுமதி வழங்கப்பட முடியாது. இந்த முதலீட்டுக்காக எண்ணக்கரு ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எண்ணக்கரு ஒன்றுக்காக அனுமதி வழங்கப்பட முடியாது. இந்த திட்டத்தை கொண்டு வரும் நபர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு செலுத்த முடியாது.

அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. இவ்வாறான ஒர் பின்னணியில் பாரிய திட்டமொன்றை அவர்களுக்கு வழங்குவது சாத்தியப்படாது என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் எவ்வித உறுதிப்படுத்துதலும் இன்றி வெளியிடப்படுகின்றன. செய்திகளை பார்த்த எனது தயாருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

எனக்கு எதிராக போலிச் செய்தி வெளியிட்ட ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனித் தனியாக ஐந்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தொரடப்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உள்ளிட்ட முடிந்த அனைத்து வழிகளிலும் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net