எரிவாயு விலை அதிகரிப்பிற்கு இனிமேலும் இடமில்லை!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) காலை எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை மாறுபட்ட வகையில் அடிக்கடி அதிகரித்தாலும், அரசாங்கம் எரிவாயு உட்பட நுகர்வுப் பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்திலே உங்களது உதவியும் ஒத்துழைப்பும் எமக்கு மிகவும் முக்கியமானது. நுகர்வோரை பாதுகாப்பதற்கே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
போக்குவரத்துச் செலவு உட்பட இதர செலவுகள் அதிகரித்துவிட்டன. சமையல் எரிபொருட்களின் விலைச்சூத்திரத்துக்கு இரண்டு தரப்பினரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும், போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் காலத்துக்கு காலம் அதிகரித்து வருவதனால், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பை மீளாய்வு செய்யுங்கள் என்று அமைச்சர்களிடம், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் அழுத்தமாகத் தெரிவித்தனர்.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவும் படிப்படியாக அதிகரித்து விட்டது. எனவே, இலாபமீட்டலில் சரிவே காணப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்பினால் தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டு, மூட வேண்டிய அபாயத்துக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, சமையல் எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்யுமாறு அவர்கள் இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தனர்.
சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தொடர்ந்தும் தமது சேவையை, நுகர்வோரை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும். உலக சந்தையில், சர்வதேச மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளதால், இலங்கையர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நுகர்வோரை மேலும் பாதிப்படையச் செய்யும் வகையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்தால், அது நுகர்வோரை மேலும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதன்போது, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் விலைச்சூத்திரம் தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சரிடம் கையளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவையின் உபகுழுவிடம் சமர்ப்பித்து, இது தொடர்பில் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெருமதி தொடர்ந்தும் அதிகரித்துள்ளதால் உலக சந்தையில் எரிபொருள் பீப்பாயின் விலை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மாதம் எரிவாயு விலையை அரசாங்கம் உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.