பெண் போராளிகள் அரச படையினரால் பாலியல் துஷ்பிரயோகம்! #Me Too தலைப்பின் கீழ் தகவல்!
இறுதி போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் அரச படையினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக #Me Too தலைப்பின் கீழ் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் #Me Too விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது துக்கத்தையே இழந்துள்ளனர்.
பெண்கள் எதிர்நோக்கிய பாலியல் துன்புறுத்தல்களை #Me Too என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரின் பெயர் அடிபட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர் லசித்மலிங்கவின் பெயரும் அடிபட்டுள்ளது. இந்நிலையில், அம்சவல்லி என்ற டுவீட்டர் பயனாளி #MeTooவில் புகைப்பட ஆதாரத்துடன் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இறுதி யுத்தகாலத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்த உஜாலினி என்ற பாடசாலை மாணவி, இறுதித் தருணங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
இவ்வாறு சரணடைந்த இந்த மாணவி அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபயவின் உத்தரவின் பேரில் 58 ஆவது படைப்பிரிவினரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
முள்ளி வாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது இவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.