அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை!
வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் கைது செய்யப்பட்டவர்களில் தண்டனைகள் வழங்கப்பட்ட கைதிகள் தவிர்ந்து, வழக்குகள் பதிவு செய்யப்படாத கைதிகள் 102 பேர் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி வழக்கு தாக்கல் செய்யவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். ஆனால் ஏனையோருக்கு குற்றங்களின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜித கூறியுள்ளார்.