விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர்!
விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மீண்டும் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்தில், 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டமை உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றது.
குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கோட்டா, விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி முதன் முறையாக மூன்று நிதிபதிகளைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் முன்னிலையானமையும் குறிப்பிடத்தக்கது.