கல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார்!
கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள விநாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேயர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனரீதியான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் செயற்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையிலுள்ள இந்து ஆலயத்தை அகற்ற முதல்வர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தொடர்பாக நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஏற்கனவே கட்டப்பட்ட விநாயகர் ஆலயத்தை இடிக்குமாறு முறையிடுவது தமது தாயை அழிப்பதற்கு சமனாகவே இந்துமக்கள் கருதுவார்கள்.
தமது வழிபாட்டு உரிமையை எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் அதை தடைசெய்ய நினைப்பது அகற்ற நடவடிக்கை எடுப்பது இனவாத சிந்தனை கொண்ட செயலாகவே கருதவேண்டியுள்ளது.
இவ்வாறுதான் கடந்த 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்ததாக தற்போதைய அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தது மட்டுமன்றி அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் அந்த நீதிபதியை தாம் இடமாற்றியதாகவும் மார்தட்டி கூறினார்.
அது அவருக்கு பெருமையாக இருந்தது. ஆனால் இந்து தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் படியான கருத்தை ஹிஸ்புல்லா வழங்கினார்.
அவர் தமது முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்துவதற்காக எமது இந்துக்கோயிலை இடித்தது அவருக்கும் அவர் சாந்த இஸ்லாம் மக்களுக்கும் பெருமையாக இருக்கலாம் ஆனால் எமது தமிழ் மக்களுக்கு அது தீராத வடுவாகவே நாம் அதை இன்றுவரை பார்க்கின்றோம்.
இன்றும் கூட அதற்கு எதிராக நாம் சட்ட நடவடுக்கை எடுக்கும் ஆதாரங்கள் இருந்தும் அவருக்கு எதிராக நாம் நீதிமன்றை நாடவில்லை.
ஆனால் 1994ல் ஓட்டமாவடியில் அமைச்சர் ஹிஸ்புல்லா செய்த அதே பாணியில் தற்போது 2018 ல் கல்முனை மேயர் செய்ய முயல்கிறார் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எல்லா மதங்களுக்கும் அவரவர் சமய வணக்க நிகழ்வை பேண வழிபட உரிமை உண்டு. கல்முனை விநாயகர் ஆலயம் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது கண்கூடு.
அந்த ஆலயம் அங்கிருப்பதால் இந்த முதல்வருக்கு என்ன இடையூறு உள்ளது என்பதை அவர் தெரிவிக்கவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.