சுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து?

சுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து?

சுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடத்தப்படுவதாகவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிற்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த உடல்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சீனர்கள் மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களின் உடல்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அந்த அமைப்பு இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு முன்னர் பெர்ன் நகர அதிகாரிகளும் அந்த உடல்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டவை என்பதற்கான ஆதாரம் மற்றும் அந்த உடல்களை பயன்படுத்துவதற்கு அந்த உடல்கள் யாருக்கு சொந்தமோ அவர்களது உறவினர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் ஆகியவற்றை சமர்ப்பித்தால்தான் அந்த கண்காட்சி நடத்த அனுமதியளிக்கப்படும் என கூறியிருந்தனர்.

இந்தநிலையில் Lausanne நகரில் நடத்தப்படுவதாக இருந்த கண்காட்சிக்கு சித்திரவதைக்கு எதிரான கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி நடத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயமானது சுவிட்சர்லாந்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net