இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம்!
இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க மாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட 141,142வது வீட்டுத்திட்டங்கள் நேற்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழாவது எட்டாவது வீட்டுத்திட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விழுதுநகர் சுபீட்சம் நகர் ஆகிய வீட்டுத்திட்டங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.
இதன்போது இரண்டு வீட்டத்திலும் 43 வீடுகள் திறந்துவைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் வீடமைப்பு அதிகாரசபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் சிலருக்கு இதன்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் வீட்டு உரிமையாளர்களுக்கான பத்திரங்களும் வழங்கப்பட்டதுடன் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவில் உதித்த மாதிரிக் கிராமங்களை அமைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் 141ஆவது, 142ஆவது கிராமங்களை திறந்து வைப்பதற்காக இங்கு நான் வருகை தந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
141,142ஆவது கிராமங்களான முல்லை நகர் மற்றும் சுபீட்சம் நகர் கிராமங்களில் மொத்தமாக 48வீடுகள் மக்களின் பாவனைக்காக இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
வீடுகள் இல்லாது தாய், தந்தையரின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் அயலவர்களின் வீடுகளிலும் வாழ்ந்த மக்களுக்கு இங்கு பல இலட்சம் பெறுமதியான காணிகளை இலவசமாக வழங்கி அதிலே பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய அழகான வீட்டையும் அமைத்து வழங்கியிருக்கின்றோம்.
பத்து பேர்ச்சஸ் காணியிலே வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பேர்ச்சஸ் காணியின் பெறுமதியானது மூன்று இலட்சம் ரூபாய்களாகும். முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான காணி இந்த மக்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் பத்து இலட்சம் ரூபா பெறுமதியானவை. நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் இன்று அரசாங்கத்தினால் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இங்கு வீடுகளை பெற்ற மக்களிடம் நான் தனித்தனியாக உரையாடிய போது அவர்கள் இதுவரை காலமும் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்துவந்ததாக என்னிடம் கூறினார்கள். மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவை வாடகையாக வழங்கிவந்ததாக கூறினார்கள்.
இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிறியளவிலான காணிக்கும் சொந்தமில்லாதவர்கள் மாதாந்தம் வாடகை வீட்டிற்கு ஐயாயிரம் ரூபாவை வழங்கிவந்துள்ளனர்.
ஆனால் இன்றைய தினம் நாற்பது இலட்சம் ரூபா சொத்திற்கு அவர்கள் சொந்தமாகியுள்ளனர். இது எங்களுடைய அரசாங்கத்தினால் செய்து வழங்கப்பட்ட விடயமாகும்.
கடந்த காலங்களிலிருந்த அரசாங்கத்தில் யாராவது இதுபோல உங்களுடைய வீடுகளிற்கு வந்து உங்களுக்கு உதவிகளை செய்தார்களா என்பதை உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். மனச்சாட்சியுடன் இதனை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இந்த வீட்டுத் திட்டத்தை அமைக்கும் பயணத்தில் சில படிமுறைகளுக்கு அமைய இந்த வீடுகளை அமைத்து வருகின்றோம். முதலாவதாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் 2500வீடுகளிற்கான அடிக்கல்லை இட்டு அதனை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அதுபோல 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் ஐயாயிரம் வீடுகளை நாங்கள் ஆரம்பித்து விடுவோம். மூன்றாம் கட்டமாக பத்தாயிரம் வீடுகளையும் நான்காம் கட்டமாக மேலதிகமாக 2015வீட்டுத் திட்டங்களையும் 2025ஆம் ஆண்டு வரும்பொழுது 20000வீட்டுத் திட்டங்களையும் அமைத்து இந்த நாட்டிலே இனங்களை மதங்களை ஜாதிகளை கடந்து இந்த இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து பிரஜைகளுக்கும் வீடு என்ற கனவை நாங்கள் நனவாக்குவோம் என்ற உன்னதமான உறுதிமொழியை இந்த சந்தர்ப்பத்தில் வழங்குகின்றேன்.
இந்த நாட்டினை மீண்டும் ஒருமுறை நாடகக்காரர்களுக்கும் வேசம் தரிப்பவர்களுக்கும் ஒப்பனைகலையாமல் மேடைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஏழை எளிய மக்களின் பசித்த வயிறு தெரியாதவர்களுக்கும் வழங்கமுடியுமா?
கடந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை,ஊடக சுதந்திரம் இருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் இனங்காணப்பட்டு படுகொலைசெய்யும் நிலமையும் காணப்பட்டது. எந்த சுதந்திரமும் அந்த ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.
தாங்களும் தங்கள் குடும்பங்களும் நாட்டினை சூறையாடிவிட்டு இந்த நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கொள்ளாமல் தங்களது நிலைப்பாடுகளையே நாட்டின் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டனர்.
அவ்வாறான கயவர்களுக்கு இந்த நாட்டினை தொட்டு தழுவுவதற்கு நாட்டினை கொடுக்கப்போகின்றீர்களா?,இதனை ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும்.கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தினை சிந்தித்துபாருங்கள்.
எமது நல்லாட்சியில் இந்த பகுதியில் 40இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகாணியை நாங்கள் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒருகடுகளவாவது காணிகள் வழங்கப்பட்டுள்ளதா?இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா?.அவர்கள் இதனையெல்லாம் செய்யமாட்டார்கள்,அவர்கள் இவ்வாறானவற்றை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுவார்கள்.
மதவாதங்களை உருவாக்கி,இனவாதங்களை உருவாக்கி சமய ஸ்தலங்களை எரித்துவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் மக்களினால் விரட்டியக்கப்பட்டனர்.
மீண்டும் ஒருமுறை எரித்த சமஸ்த்தலங்களுக்கு வருகைதந்து வழிபாடுகளில் கலந்துகொள்கின்றனர்.தங்களை நல்லவர்கள் போன்ற ஆடைகளை தரித்துக்கொண்டே அவர்கள் வருகின்றனர்.
இவர்கள் தொடர்பில் மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும்,அவர்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடக்க ஒடுக்கி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள்,மக்களின் வாழ்வினையழித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்துகொள்ளவேண்டும்,அந்த மாளிகையில் பள்ளிகொள்ளவேண்டும் என சிந்திக்கின்றனர்.
இந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம்.அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மதங்கள்,மொழிகளை மறந்து ஒருதாய் பிள்ளைகள்போல் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும்.
அதற்காக கடந்தகாலத்தில் கசப்பான அனுபவங்களை கொண்டுவந்த தலைவர்களை மீண்டும் ஒருமுறை சிங்காசனத்தில் அமரவைப்பதா அல்லது வீடுகளுக்கு வந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு இந்த நாட்டில் இடமளிப்பதா என்பதை இங்குள்ள மக்களே சிந்திக்கவேண்டும்.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.