2 ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் வேலை செய்த மைத்திரி!
இரண்டு ரூபாய் சம்பளத்திற்காக 4 மணித்தியாலங்கள் கோழிக்கூடு சுத்தம் செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று கண்டி பொல்கொல்ல கூட்டுறவு நிறுவனத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சையில் சித்தி அடைந்தால் மாத்திரம் ஒரு பிள்ளையின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது.
சாரணர் பயிற்சிகளை பிரயோசமான முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சவால்களை வெற்றி கொள்ளும் மனநிலை ஏற்படுகின்றது.
18 வயதில் ஜனாதிபதி சாரணர் விருதை பெறுவதற்கு, பல செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். 4 வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே சாரணர் விருது வழங்கப்படுகின்றது.
நான் 16 வயதாக இருந்த காலப்பகுதியில் சாரணராக வீடு வீடாக சென்று வேலை செய்துள்ளேன்.
ஒரு நாள் வீடு ஒன்றிற்கு சென்று வேலை கேட்டேன். பல வருடங்கள் சுத்தம் செய்யாத கோழி கூடு ஒன்றை சுத்தம் செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது.
நான் சுத்தம் செய்யும் பணியை 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் செய்தேன். அதற்காக வீட்டின் உரிமையாளர் இரண்டு ரூபாயை சம்பளமாக எனக்கு கொடுத்தார் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.