சட்டப்பிரச்சினைகள் தொடர்பாக முறையிடுங்கள் – உடன் நடவடிக்கை எடுப்போம்!
மக்கள் எதிர்நோக்கும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அனுப்புமாறும், அவற்றிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 46ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரவை வரவேற்கும் நிகழ்வு, உச்ச நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
புதிய பிரதம நீதியரசரை சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயந்த ஜயசூரிய மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் தலைவர் யு.ஆர்.டி.சில்வா ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதம நீதியரசர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்கவும் உறுதியுடன் செயற்படுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.
அதேபோல் நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களும் கவனஞ்செலுத்துவது அவசியமென நீதியரசர் வலியுறுத்தினார்.
இதேவேளை, தன்னை பிரதம நீதியரசராக நியமித்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட கொழும்பில் முக்கிய நிதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.