சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் முடிவினை தற்போது பார்க்கலாம்,

டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், இம்ரூள் கைஸின் சதத்தின் துணையுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக இம்ரூள் கைஸ் 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கெய்ல் ஜார்வீஸ் 4 விக்கெட்டுகளையும், டென்டாய் ச்சாடாரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதன்போது சிம்பாப்வே அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மெஹீடி ஹசன் 3 விக்கெட்டுகளையும், நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இம்ரூள் கைஸ் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறு தினம் சிட்டங்கொங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net