ஸ்பெயினில் பாரிய வெள்ளம் ! ஒருவர் பலி!
தெற்கு ஸ்பெயினில் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மீட்புப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயினின் மலாகா மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்த அடைமழையினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை அவர்களது இல்லங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீட்புப்பணியாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீயணைப்புப்படையைச் சேர்ந்த மீட்புப்பணியாளர், வீரர் ஜோஸ் கில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய மழைவீழ்ச்சி பதிவாகிய மலாகா நகரத்திற்கு 62 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் அர்டலீஸ் நகரத்தில் மாத்திரம் 24 மணிநேரத்திற்குள் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.