நாளை கொழும்பு முடக்கப்படுமா?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாளை கொழும்பில் கருப்பு சட்டை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் 24 போராட்ட குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாளைய தினம் கொழும்பு காலி முகத்திடலில் கறுப்பு சட்டை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பில் ஒக்டோபர் 24 போராட்ட குழுவினால் கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இதன் போது ஒக்டோபர் 24 போராட்ட குழுவினால் நாளை முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலி முகத்திடல் கறுப்புச் சட்டைப் போராட்டம் -24.10.2018
(இது அனைத்து பேனர்களிலும் சின்னதாக வரலாம்) வரலாற்றை மாற்றும் அரசியலற்ற மலையக இளைஞர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தக் கோரிய மலையக இளைஞர்களின் மானப் போராட்டம். நமக்கென்ன நமக்கென்ன என நழுவிய காலம் போய் நாம் மாற்றுகிறோம் எனப் புறப்படும் மலையக இளைஞர்கள்.
200 வருட இருண்ட வரலாற்றை ஒளியேற்றும் மலையக இளைஞர்களின் காலிமுகப் போராட்டம். தோட்டத் தொழிலாளர் வரலாற்றை மாற்றும் அரசியலற்ற மலையக இளைஞர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
குறைகளை ஓதிய துதிகளை முடித்து குமுறல்கள் மாற்றி குழுவாய் எழுந்து மலையக தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தக் கோரும் மாபெரும் ஒன்றுகூடல்.
இரத்தத்தை உறிஞ்சும் யுத்தத்தை முடிப்போம் இரத்த உறவுகள் அனைவரும் உணர்வோம் காலி முகத்திடலுக்கு ஒன்று திரள்வோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் இளைஞர் படையுடன் புரட்சிப் பயணம். தேசியத்தை கட்டியெழுப்பும் பொருளாதார முதுகெலும்புகள் முடங்கி கிடக்கும் நூற்றாண்ட கலைத்து புதிய வரலாற்றை எழுதுவோம் (கருப்புச் சட்டைப் போராட்டம்).
தோட்டத் தொழிலாளர்களை துச்சமாய் நினைக்கும் துரோகிகளுக்கு எங்களின் அடையாளத்தைக் காட்டும் உணர்வுப் போராட்டம்.
இருண்ட மலையகத்தை ஒளியேற்ற புறப்படுவோம், இனியும் நிலை மறந்து இருப்பதை அழித்திடுவோம் ஒன்று சேர்வாய், மலைத் தமிழா நின்று செய்வாய் மலை நாட்டை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் பணிபுரியும் மலையக பகுதிகளை சேர்ந்த பெருவாரியான இளைஞர் யுவதிகள் நாளை போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதனால் கொழும்பின் வர்த்தக நடவடிக்கைகள் நாளை முடக்கப்படலாம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.