மூடிய அறைக்குள் மோடியுடன் பேசியது என்ன? மைத்திரியிடம் ஒப்புவித்தார் ரணில்!
டெல்லியில் மூடிய அறைக்குள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனைய சந்திப்புகளின் நோக்கங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரியப்படுத்தியுள்ளார்.
இந்திய விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் கலந்துகொண்ட சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இதன் போது ஜனாதிபதிக்கு பிரதமரால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடனான சந்திப்புகள் குறித்தும் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ வியத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே கலந்துகொண்டதாக அந்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்த அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
தன்னைக் கொல்ல “ரோ” சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பாக மூடிய அறைக்குள் பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால் இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய இருதரப்பு பேச்சுக்களின் போது இந்த விவகாரம் பேசப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.