சுவிற்சர்லாந்தில் பலரை வியப்பில் ஆழ்த்திய பட்டமளிப்பு விழா!

சுவிற்சர்லாந்தில் பலரை வியப்பில் ஆழ்த்திய பட்டமளிப்பு விழா!

சுவிற்சர்லாந்து – பேர்ண் நகரில் இடம்பெற்ற முத்தமிழ் விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை அண்மையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சுவிஸ் நாட்டுப் பிரமுகர்கள், தமிழ்ப் பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், தமிழாசிரியர்கள், கலையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வழி பட்டப்படிப்பை, பட்டமேற்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பும், 2017/18 கல்வியாண்டிலே தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 12 நிறைவுசெய்த மாணவர்களுக்கான மதிப்பளிக்கும் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்றன.

அத்துடன் , 2017/18 கல்வியாண்டில் தமிழ்மொழியில் 10 ஆம் ஆண்டில் சித்திபெற்ற மாணவர்களும் 25 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சேவை நிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இதன்போது, கல்விச்சேவையால் நடாத்தப் பெற்ற ஓவியப்போட்டி 2018இல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு போட்டியிலே வரைந்த ஓவியத்தின் பிரதியும் சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் வெற்றி பெற்றவர்களின் ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இசை, நடனம், நாட்டுக்கூத்து என முத்தமிழ் சார்ந்த நிகழ்வுகளோடு தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும், தாயகத்திலிருந்து வருவிக்கப்பெற்ற பனம்பொருட்களும் முத்தமிழ் விழாவில் தமிழர் பண்பாட்டை மெருகூட்டியது.

வண்ணம் தீட்டுதல், தமிழ்மொழி சார்ந்த போட்டிகள் போன்ற சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2018, எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.

நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ் விழா மலரும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் மதிப்பளிப்பு மலரும், தமிழ்க் கல்விச்சேவையால் தொகுத்து ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரை காலமும் 10ஆம் தரத்துடன் இருந்த சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்வி சேவை தற்போது 11,12ஆம் ஆண்டு என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பல தமிழ் உயர்கல்வி கற்றவர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் சந்ததியினர் ஆர்வத்துடன் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அது மட்டும் இன்றி இந்த விடயம் அங்கு வருகைத் தந்திருந்த ஒட்டு மொத்த தமிழர்களையும் , புலம்பெயர் தமிழர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net