நான் 100 சதவீதம் சுத்தமானவன்!

நான் 100 சதவீதம் சுத்தமானவன்!

தன் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு, தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என கால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஜூவெண்டஸ் அணியின் வீரரான ரொனால்டோ, மென்செஸ்டர் நகரிற்கு சென்றுள்ளது.

அங்கு சென்றுள்ள ரொனால்டோ ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், கலந்துக் கொண்டு இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘நான் 100 சதவீதம் சுத்தமானவன். களத்திலும் சரி களத்துக்கு வெளியேயும் சரி என்னிடம் ஒழுங்கு உண்டு. இதனால், மகிழ்ச்சியான மனிதனாக உள்ளேன்.

நான் ஒரு அற்புதமான அணிக்காக விளையாடி வருகிறேன். அருமையான, நிறைவான குடும்பம் உள்ளது. 4 குழந்தைகள் இருக்கின்றனர். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அற்பக் குற்றச்சாட்டுகள் என் மகிழ்ச்சியைப் பாதிக்காது.

எந்தச் சூழலிலும் நான் பொய் சொன்னதில்லை. என் வழக்கறிஞர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நான் எப்போதும் உண்மைக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். கால்பந்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றதும் மீதி வாழ்க்கையைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கழிப்பேன்’ என கூறினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள, லாஸ்வேகாஸ் விடுதியில் வைத்து அந்நாட்டு பெண்ணான கேத்ரின் மயோர்கா என்ற 25 வயது பெண்மணியை, பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பெண், அப்பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில், பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க பெருந் தொகையான பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் கேத்ரின் மயோர்கா வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரொனால்டோவும், அந்த இளம்பெண்ணும் இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்வது என கடந்த 2010ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.

இதற்காக அந்த பெண்ணுக்கு, ரொனால்டோ 3,75,000 டொலர்கள் இழப்பீடு வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இந்த பிரச்சினை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரொனால்டோ மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்வது என போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி, அந்த பெண்ணின் சட்டத்தரணிகள்; வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரொனால்டோ மீதான பாலியல் புகார் மீது அமெரிக்க பொலிஸார், மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதேவேளை. இத்தகைய செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரொனால்டோவின் சட்டத்தரணி கிறிஸ்டியன் ஸ்கெர்ட்ஸ் கூறியுள்ளார். மேலும், பத்திரிகையின் இந்த செய்தி தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இதற்காக ஊடகவியலாளர்களிடம் இருந்து தனது கட்சி காரருக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக விளையாட்டு வீரர்களில் மிகவும் புகழ் பெற்ற வீரராக ரொனால்டோ விளங்குவதுடன், இவர் ஐந்து முறை உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net