ஊடக அவதானம் என் மீது வந்துவிடும் என்பதற்காக மலையக போராட்டத்திற்கு செல்லவில்லை!

ஊடக அவதானம் என் மீது வந்துவிடும் என்பதற்காக மலையக போராட்டத்திற்கு செல்லவில்லை அமைச்சர் மனோ!

மலையக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும் போதே நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் கருத்துரைக்கும் போது,

அந்த ஆர்ப்பாட்டம் மலையக இளைஞர்களால் ஒரு தன்னியக்க போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது மலை விழித்தெழுந்து விட்டது, மலையகம் ஒளிர்கிறது என்பதை அடையாளப்படுத்திவிட்டது அந்த போராட்டத்திற்கு நாங்கள் தார்மீக ஆதரவை வழங்கி இருக்கிறோம்.

நான் நேரடியாக கலந்து கொள்ளவில்லை நான் கலந்து கொண்டால் ஊடக அவதானம் என்னிடம் வந்துவிடும் என்ற காரணத்தினாலே முழுமையாக ஊடக அவதானம் அதை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்று கருதியதால் நாம் போராட்டத்துக்கு செல்லவில்லை.

ஆனால் அந்த எழுச்சி போராட்டமானது எங்களுடைய அரசாங்கம் உட்பட அனைவருக்கும் ஒரு சிவப்பு விளக்கை எடுத்துக் காட்டியிருப்பதாக நினைக்கின்றேன். உண்மையிலேயே அரசாங்கத்தில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் மலையக தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை சம்பந்தமாக கம்பனிக்காக முகவர்களாக செயற்படுகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

ஆகவே இன்று வரும் பொழுது நான் பிரதமருடன் பேசியிருக்கின்றேன் அடுத்த திங்கட்கிழமை இறுதி கட்ட பேச்சுவார்த்தை இருக்கின்றது.

இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயத்தை வழங்க முடியாவிட்டால், நியாயத்தை பெற்றுத்தராவிட்டால் கம்பெனிகள் மூலமாக சரியான சம்பளத்தை வழங்காவிட்டால் அரசே முன்னின்று தலையிட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம்.

அதனை செய்யாவிட்டால் அரசாங்க பங்காளி கட்சிகள் என்ற அடிப்படையில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net