கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை!

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்கள் மாறவில்லை!

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் கூறப்போகும் கருத்து தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அந்தவகையில், நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ முக்கிய கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

கதிரைகள் மாறியுள்ளனவே தவிர விடயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென அவர் கூறியுள்ளார்.

அதாவது பதவிநிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, அவற்றின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்பதே அவரது கருத்தாக அமைந்துள்ளது.

மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மைத்திரி அமைச்சுப் பொறுப்பை வகித்திருந்தார். இப்போது ஜனாதிபதியாக மைத்திரி செயற்படும் நிலையில், மஹிந்த பிரதமராக உள்ளார்.

இந்த பதவிநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளனவே தவிர, செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லையென மஹிந்த குறிப்பிடுவதானது, சகல விடயதானங்களும் தமது கட்டுப்பாட்டில் இருக்குமென்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை தன்னுடைய அரசியல் பாதையும் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பாதையும் வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தமையே பிளவிற்கு காரணம் என ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தன்னை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகளின் பின்னர் பிரதமர் அதுகுறித்து அவ்வளவாக கரிசனை கொள்ளாமையும் காரணமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான செய்திகளின் பின்னர் நல்லாட்சி ஆட்டம் காண ஆரம்பித்தது.

இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று, அதன் வெளிப்பாடாக நேற்று முன்தினம் மாலை அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறியது. வெளியேறி சில நிமிடங்களில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.

நாட்டின் அரசியலில் ஏற்பட்ட இத்திடீர் மாற்றம் தொடர்பாக பல கருத்துக்கள் வெளிப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு, இனிவரும் கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் மஹிந்த சூட்சகமாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net