விரைவில் நாடாளுமன்ற தேர்தல்!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல்!

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முடிந்தளவு விரைவாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே தமது இலக்கு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நாடாளுமன்றில் தெளிவான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை எம்மிடம் உண்டு. அதனை நிரூபிக்க தயாராக உள்ளோம்.

ஜனாதிபதி குறிப்பிட்டமைக்கமைய எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும். பெரும்பான்மை விடயத்தில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. முடிந்தால் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டட்டும்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே எமது இலக்கு. அதற்கான தயார்படுத்தல்களை முன்னெடுப்போம்.

அத்தோடு, அடுத்த ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாத காலத்திற்கான கணக்கு வாக்கெடுப்பொன்றை முன்வைக்கவுள்ளோம். நாட்டின் இயல்புநிலை மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க குறித்த கணக்கு வாக்கெடுப்பு உதவும்.

மேலும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து ஒரு புதிய யுகத்தில் காலடி எடுத்து வைக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

(வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை, அதற்கிடைப்பட்ட கால நிதி செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் திட்டமே கணக்கு வாக்கெடுப்பாகும்)

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net