இலங்கை அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் பங்கு என்ன?

இலங்கை அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் பங்கு என்ன?

ஒருசில மணி நேரங்களில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் சர்வதேசத்தின் கவனத்தையே ஈர்த்துவிட்டது. தற்போதைய நிலைவரம் மட்டுமன்றி எதிர்கால நடப்புகள் தொடர்பாகவும் பல நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

பூகோள அரசியலில் இலங்கையுடன் இந்தியா நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றதென்பது உலகறிந்த உண்மை. அரசியலில் மட்டுமன்றி பொருளாதார ரீதியாவும் இரு நாடுகளுக்கும் இடையில் பிணைப்பு காணப்படுகிறது. அயல்நாடு என்ற ரீதியில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு இன்னும் அதிகமானது.

எனினும், தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின் இந்தியா மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி இன்று எம்முன் நிற்கின்றது.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக அமெரிக்கா, சீனா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் என பல மட்டங்களிலிருந்து பிரதிபலிப்புகள் வெளியாகின. தொப்புள்கொடி உறவென காலம் காலமாக கூறிவந்த அயல்நாடான இந்தியாவின் மௌனம் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதன் பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா இவ்விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

வழமைக்கு மாறான இந்தியாவின் இந்தச் செயற்பாடானது, இலங்கையில் இவ்வாறு நடைபெறப் போகின்றதென ஏற்கனவே இந்தியா அறிந்துவைத்திருந்ததா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, இதில் இந்தியாவுக்கும் பங்குண்டா என்ற கேள்வியும் மறுபுறத்தில் எழுகின்றது.

முதலாவதாக ஒரு விடயத்தை எடுத்து நோக்கினால், பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய அரசியலில் மட்டுமல்ல, இலங்கை அரசியலிலும் அவரது செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்துள்ளமை மறுத்துவிட முடியாது.

குறிப்பாக இன்று இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரபேல் போர் விமான உடன்படிக்கை தொடர்பாக முதன்முதலாக எதிர்ப்பு வெளியிட்டவர் சுப்ரமணியன் சுவாமி. இன்று அவ்விடயம் பூதாகரமாகி, பலரது அரசியல் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் நிலைக்கு மாற்றியுள்ளது.

அதேபோல அண்மையில் இந்தியா சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவை ஒரு நிகழ்வில் பேசவைத்திருந்த சுப்ரமணியன் சுவாமி, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் மஹிந்த கைப்பற்றுவார் என சூட்சுமமாக குறிப்பிட்டிருந்தார். சுப்ரமணியன் சுவாமி அவ்வாறு குறிப்பிட்டதை சாதாரணமாக எடுக்க முடியாது. அவர் அவ்வாறு கூறுவாராக இருந்தால், இதுபற்றி இந்திய ஆளும் தரப்பிற்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அண்மையில் இந்திய தொலைக்காட்சியொன்றில் இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பில் உரையாற்றியிருந்த பிரபல ஊடகவியலாளர் ஆர்.மணி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, அனைவரும் அறிந்ததைப் போன்று, சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்குவதை இந்தியா விரும்பவில்லை. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றே இந்தியா பார்க்கின்றதென அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாட்டுடனான வெளியுறவுக் கொள்கையை இவ்வாறு ஒரு ஒற்றைப்புள்ளியில் வைத்து பார்க்க முடியாதென்றும், இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார்.

நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரி தீவிரமாக எதிர்த்து வந்தார். வெளிநாடுகளுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணிலே தீவிரமாக செயற்பட்டு வந்தார். இவ்விடயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளமை தற்போது ஜனாதிபதி வெளியிட்டு வரும் கருத்துக்களின் மூலம் அறிக்கூடியதாக உள்ளது.

இந்தியாவுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே மைத்திரி மீது இந்தியாவுக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கலந்துரையாடப்பட்ட திட்டத்தை இன்னும் செயற்படுத்தவில்லையென்ற அதிருப்தியில் இந்தியா இருந்ததாகவும், ஆகவே ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிக்கு மாற்றீடாக ஒருவரை தேடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமான நிலையம் போன்ற திட்டங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு முயற்சித்த போதும், அதனை ஜனாதிபதி மைத்திரியே தடுத்து நிறுத்தியுள்ளாரென பிரபல ஊடகவியலாளர் பீ.கே.பாலச்சந்திரன் எழுதிய கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எட்கா உடன்படிக்கைக்கும் மைத்திரியே முட்டுக்கட்டையாக இருந்துள்ளார்.

மறுபக்கம் 63,000 வீடுகளை இலங்கையில் கட்டிக்கொடுக்க இந்தியா உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதோடு, அதில் 48,000 வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. அம்புலன்ஸ்களை வழங்கியுள்ளது. நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், இந்தியாவின் நலன்சார் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை தடையாக இருந்ததால், இந்தியா கடும் அதிருப்தியில் இருக்கின்றதென அவர் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விடயத்தில், ‘றோ’ வின் பெயரை குறிப்பிட்டு தம்மை தேவையில்லாமல் இவ்விடயத்தில் இழுத்துவிட்டுள்ளதாக இந்தியா கருதுகின்றது.

தற்போது மைத்திரி – மஹிந்த தரப்பினர் இந்திய தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள போதும், அதற்கு இந்தியா எவ்வித பதிலையும் வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

ஆக, இலங்கையில் நடக்கப்போவதை இந்தியா தெரிந்துவைத்திருந்தமை, இலங்கையில் ஒரு மாற்றீடை எதிர்பார்த்தமை என்பன உண்மையென நிரூபிக்கும் வகையிலான சம்பவங்கள் இங்கு நடந்தேறியுள்ளன.

அது ஒருபுறமிருக்க, இந்தியா தமது நலன்சார்ந்த விடயங்களில் மட்டும்தான் கவனஞ்செலுத்துகின்றதா என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. இலங்கை தமிழர்களை தொப்புள்கொடி உறவென்றும், இலங்கை மக்களுக்காய் துணைநிற்போம் என்றும் கூறிய இந்தியா, தமது அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேறவில்லை என்ற காரணத்தால் இலங்கையை கைவிட்டுள்ளதா?

இவ்வாறு பார்க்கும்போது, ஒவ்வொரு நாடுகளும் தமது வெளியுறவுக்கொள்கையில் ஒரு சுயநலப் போக்கை கடைப்பிடிப்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

குறுகிய காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் உலக அரங்கையே அதிர வைத்துள்ளது. ஒரே ஆட்சிக்குள் இருந்த இரு தலைவர்கள் இன்று ஆளுக்காள் குறைகூறிக்கொண்டு இரு துருவங்களாகி, இறுதியில் நல்லாட்சிக்கு வழங்கிய ஆணை சுக்குநூறாகியது.

நல்லாட்சியின் பண்புகளிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகியதால் இவ்வாறான புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளார். அப்படியானால் நல்லாட்சியில் மக்கள் எதிர்பார்த்தவை இனிவரும் ஆட்சியில் நிறைவேறுமா?

தற்போது புதிய பிரதமரை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், அரசியலமைப்பின் சிங்கள மொழிமூலத்திற்கிணங்க ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கலாம் என சுதந்திரக் கட்சி குறிப்பிடுகிறது.

இறுதியில் இவ்விடயம் முடிவுறுத்தப்பட்டு யாரோ ஒருவர் ஆட்சிக்கதிரையில் ஏறப்போகின்றார்கள். அவ்வாறு அதிகாரத்தை கையிலெடுப்பவர் இத்தனை வருடகால பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பாரா?

-கலாவர்ஷ்னி கனகரட்ணம்-

Copyright © 8180 Mukadu · All rights reserved · designed by Speed IT net