சிவசக்தி ஆனந்தனுக்கு வலைவிரிக்கும் ரணில்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் மற்றும் மகிந்த தரப்புக்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு சிவசக்தி ஆனந்தன் வெற்றிபெற்றிருந்தார்.
எனினும், கூட்டமைப்பில் இருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு இரண்டு தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவினை கோரியதாக தெரியவருகின்றது.
இதேவேளை, தமிழ் மக்கள் நலன் சார்ந்து முன்வைக்கின்ற கோரிக்கைகளை ரணில் மற்றும் மகிந்த தரப்பு கொள்ளாமல் விட்டால் இவர்கள் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் மக்களைப் பொறுத்தரைவயில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சனைகள் இறுக்கின்றன. ஆகையினால் தமிழ் மக்களின் நலன் சார்ந்தே இதனை அனுக வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய தமிழ் மக்கள் நலன் சார்ந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த விடயத்தில் யாருக்கும் ஆதரவளிக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது” என அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.