புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கூட நாம் உதவியை கோரியிருக்கவில்லை! ரணில் கோரியிருப்பது தேசத்துரோகம்!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும் ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன.
இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது எனவும் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றதாக குறிப்பிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருப்பதாகவும், ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்முறையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.