கட்சி மாற 48 கோடி ரூபாய் ! சபாநாயகரிடம் முறைப்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேரம் பேசும் நடவடிக்கை தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மாற்றம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.
அதற்காக இரு அணியினரும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இந்நிலையில், இவ்வாறு பேரம் பேசும் நடவடிக்கை தொடர்பாக முதன்முதலாக உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.