சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அசார் அலி ஓய்வு!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அசார் அலி ஓய்வு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

எனினும், 33 வயதான அசார் அலி, தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து அசார் அலி கூறிய கருத்துக்கள் இவை,

“இந்த முடிவை பல யோசனைக்குப் பிறகே எடுத்திருக்கிறேன். முடிவை அறிவிப்பதற்கு முன் தலைமை தேர்வாளர், அணித்தலைவர், கிரிக்கெட் சபை தலைவர் ஆகியோரிடம் பேசினேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்த விரும்புகிறேன். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர்கள் வருகின்றனர். அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

அடுத்த ஆண்டு உலகக் கிண்ணம் வரவுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் இன்னும் சற்று பங்களிக்க வேண்டியுள்ளது. ஆனால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில், அணியில் இருந்து விலக இது தான் சரியான நேரம்.
ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக எனக்கு ஒருசிலர் ஆதரவு அளிக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நான் சிறந்தவன் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். பாகிஸ்தான் அணியை அணித்தலைவராக வழிநடத்துவது எளிதான காரியம் கிடையாது. ஆனால், அணித்தலைவராக அதுவும் எனக்கு நல்ல நினைவுகள்” என கூறினார்.

அசார் அலி, இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். எனினும் தொடர் தோல்விகளினால் கடும் விமர்சனத்துக்குள்ளான அவர், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு அவரால் அணியில் நிலையாக நீடித்து இருக்க முடியவில்லை. அத்தோடு அவரும் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவும் இல்லை.

இந்த காலட்டத்திலேயே துடுப்பாட்டம், பந்து வீச்சு என அதிசிறந்த வீரர்களை பாகிஸ்தான் அணி உள்வாங்கியது.

அப்போது அசார் அலிக்கு பதிலாக இமாம் உல் ஹக் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். இமாம் உல் ஹக் அணியில் சிறப்பாக செயற்பட்டு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டதால், அசார் அலிக்கான வாய்ப்பு பறிபோனது.

எனினும், ஐ.சி.சி. சம்பியன்ஷிப் தொடரில் உள்வாங்கப்பட்ட அசார் அணி, இந்தியா அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 59 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணி, சம்பியன் பட்டம் வெல்வதற்கும் உதவினார்.

இருந்த போதிலும் புதுமுக வீரர்களின் துடுப்பாட்ட திறனால் அவரால் அணியில் நீடித்து நிலைக்க முடியவில்லை. ஆனால் இளம் வீரர்களின் எதிர்காலம் கருதி அவர் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

அசார் அலி, கடந்த 2011ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் அவர் இறுதியாக ஜனவரி மாதம் நடைபெற்ற நியூலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடினார்.

இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அசார் அலி, மூன்று சதங்கள், 12 அரை சதங்கள் அடங்களாக 1845 ஓட்டங்களை குவித்துள்ளார். எனினும் அசார் அலி, இதுவரை ரி-20 போட்டிகளில் விளையாடியது கிடையாது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சிறந்த வீரராக இனங்காணப்பட்டுள்ள அசார் அலி, இதுவரை 67 போட்டிகளில் விளையாடி 5303 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்கள், மூன்று இரட்டை சதங்கள், 29 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஓட்டமாக 302 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 44.19 ஆகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net