ஜனநாயக விழுமியங்களை மதிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து!
ஜனநாயக விழுமியங்களை மதித்து அரசியல் யாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் இலங்கையை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு (வியாழக்கிழமை) தொடர்புகொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, சட்டத்தின் ஆட்சியை மதித்து அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று தமது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அரசியலமைப்பிற்கு முரணான செயலென ஐ.தே.க. குறிப்பிட்டு வருகின்ற நிலையில், ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றில் இதற்கு விரைவில் தீர்வை காணவேண்டுமென உலக நாடுகளும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.