நாடாளுமன்றம் 7ம்திகதி கூடும்! சபாநாயகர் தெரிவிப்பு!
நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ வெளியாகும் என எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியின் முதலாம் இலக்க அறையில் தற்போது இடம்பெற்று வரும் சந்திப்பின் போதே சபாநாயகர் இந்தத் தகவல்களை வெளியிட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
7ம்திகதிக்கான வர்த்தமானி அறிவித்தல் தாமதிக்கப்படுமிடத்து சபாநாயகர் தனக்குரிய அதிகாரத்தைப் பாவித்து நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என கட்சித்தலைவர்கள் ஏகமனதாக சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியுள்ள கட்சித்தலைவர்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என்றும் அரசியல்சாசன சதிநடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துப் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச்சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக ஹர்ஸ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
116 எம்.பிக்கள் இந்தச்சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஹர்ஸ டி சில்வா, ஜேவிவியை பிரதிநிதித்துவப்படுத்தி 2 எம்.பிக்கள் பங்கேற்றுள்ள நிலையில் (ஜேவிபியின் மொத்த நாடாளுமன்ற எண்ணிக்கை 6 ஆகும்) பிரதமருடன் சேர்த்து தம்வசம் 121 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.